ஆப்கானிஸ்தானில் கால்நடை சந்தையில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கால்நடை சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்.

Update: 2020-06-30 00:44 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவர்கள் நாடு முழுவதும் தொடர் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹெல்மெட் மாகாணம் சான்கின் மாவட்டத்தில் உள்ள கால்நடைச் சந்தை நேற்று காலை பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது திடீரென சந்தையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.

குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்பு கால்நடை சந்தையை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தெரிந்ததாகவும் இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப் பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்