ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 19 பேர் உடல் கருகி சாவு

ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Update: 2020-07-02 00:18 GMT
டெஹ்ரான்,

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தாஜ்ரீஸ் பஜார் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான சிறிய ஆஸ்பத்திரி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளி நோயாளிகள் பலர் டாக்டரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்து காத்திருந்தனர்.

அப்போது ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்தது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதனை கவனிப்பதற்குள் கியாஸ் கசிவால் தீப்பிடித்தது. அன்னை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர்கள் ஒன்றொன்றாக வெடித்துச் சிதறின.

இதனால் அங்கு பயங்கர தீ விபத்து நேரிட்டது. மளமளவென கொளுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்துக்குள்ளாக ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. ஆஸ்பத்திரியில் டாக்டரை பார்ப்பதற்காக காத்திருந்த அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

அதேபோல் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வேகவேகமாக ஆஸ்பத்திரியை விட்டு வெளியேற தொடங்கினார். ஆனாலும் பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 15 பெண்கள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்