ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 6 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர்.

Update: 2020-07-08 21:45 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.

ராணுவ முகாம்கள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அதேபோல் நாடு முழுவதும் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்த நாட்டு ராணுவம் வான்வழியாகவும் தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தாஹரில் ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்தனர்.

இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. கரும் புகை மண்டலம் உருவானது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் அப்பாவி மக்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில் கஜினி மாகாணத்தில் உள்ள தயாக் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கி வெடித்து சிதறியது.

இதில் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த 2 தாக்குதலுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்