ஆப்கானிஸ்தானில் 5 ராணுவ தளங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா - பென்டகன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் 5 ராணுவ தளங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-15 22:23 GMT
நியூயார்க், 

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பலனாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரு தரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படை முழுமையாக திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா உறுதி அளித்தது.

அதன்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர். எனினும் ஆப்கானிஸ்தானில் பூரண அமைதி திரும்பும் வரை 8,000 அமெரிக்க வீரர்கள் அங்கு இருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள 5 முக்கிய ராணுவ தளங்களில் இருந்து தங்களது படை வீரர்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

எனினும் ஏற்கனவே அறிவித்தபடி 8,000 வீரர்கள் அங்கு இருப்பது உறுதி செய்யப்படும் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாப்மேன் கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைத்து நீடித்த அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்