அமெரிக்காவிற்கு பதிலடியாக சீனாவில் கீழிறக்கப்பட்ட அமெரிக்க கொடி

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப்பட்டது.;

Update:2020-07-27 14:54 IST
பீஜிங்,

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வெறும் குற்றச்சாட்டுடன் நிற்காமல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்காவின் அறிவு சார் சொத்துகள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீன தூதரகங்களை மூட உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தூதரக மூடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இயங்கி வரும் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெறும் முடிவை சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில் சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமெரிக்கக் கொடி இன்று காலை கீழ் இறக்கப்பட்டது.

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா வெள்ளிகிழமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்