டிரோன் மூலம் வீட்டை தாக்க முயற்சி... புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.;

Update:2025-12-30 08:31 IST

மாஸ்கோ,

நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ல் ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு இரு நாடுகளின் தலைவர்களிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக 20 அம்ச ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி உக்ரைன் தரப்பு கூறியது. குறிப்பாக போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப ஒப்படைக்க முடியாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் நிராகரித்தது. இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து உக்ரைன் மீதான போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி இரு நாடுகளும் பரஸ்பரம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடக்கே உள்ள நோவ்கோரோட் பிராந்தியத்தில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினின் கிராமப்புற இல்லம் உள்ளது. நேற்று அதிகாலையில் இந்த வீடு மீது தாக்குதல்கள் நடத்தும் வகையில் டிரோன்கள் பறந்துவந்தன.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற ராணுவத்தினர் டிரோன்களுக்கு பதிலடி கொடுத்தனர். அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். டிரோன்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு் டிரம்பின் குழுவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று ரஷிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நடந்த நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாகவும், அமைதியான முறையில் தீர்வு காண ஜெலன்ஸ்கியிடம் அறிவுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்