நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து கொள்ளை கும்பல் தாக்குதல்; 14 பேர் பலி

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாயினர்.

Update: 2020-08-14 23:25 GMT
அபுஜா, 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களின் கொட்டத்தை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இதற்கிடையில் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பயன்படுத்தி ஆயுதம் ஏந்திய கொள்ளைக் கும்பல்கள் நாடு முழுவதும் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் வட மத்திய மாகாணமான நைஜரில் உள்ள உகுரு என்ற கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் புகுந்தது.

அவர்கள் அங்கு தங்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினர். பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள் கால்நடைகளையும் திருடிச் சென்றனர்.

கொள்ளை கும்பலின் இந்த கொடூர தாக்குதலில் ஒரு பெண் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்