ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

Update: 2020-08-24 00:09 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

ராணுவ முகாம்கள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதேபோல் நாடு முழுவதும் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்த நாட்டு ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் கபான் அபாத் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்த நாட்டின் விமானப்படை வான்தாக்குதல் நடத்தியது. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். அத்துடன் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் போலீஸ் சோதனைச் சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்