கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் எந்தளவுக்கு பலன் தரும்? - அமெரிக்க விஞ்ஞானிகள் மதிப்பீடு

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதில் தடுப்பூசிகள் எந்தளவுக்கு பலன் தரும் என்பது தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.

Update: 2020-08-27 00:54 GMT
நியூயார்க்,

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்கு ஒரே நம்பகரமான தீர்வு, தடுப்பூசி மட்டும்தான் என்பதில் விஞ்ஞானிகளிடையே மாற்று கருத்து இல்லை. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றை அடித்து விரட்டுவதற்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பல நாடுகளில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். 4,5 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் கொள்கை வகுக்கிற ஆட்சி தலைமைகளுக்கு உதவுகிற விதத்தில், கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் தடுப்பூசிகள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை கண்டறிய ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள குனி பொது சுகாதார பட்டதாரி கல்லூரி விஞ்ஞானிகள் நடத்தி உள்ளனர்.

கணினி உருவகப்படுத்துதல் மாதிரியை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், அமெரிக்கன் ஜர்னல் ஆப் பிரிவென்டிவ் மெடிசின் பத்திரிகையில் வெளியாகி உள்ளன. இந்த ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த குறிக்கோள், தடுப்பூசி செயல்திறனை அடையாளம் காண்பதுதான். ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ள முடிவுகள் வருமாறு:-

* பொது மக்களில் 60 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டால், தொற்று நோயை தடுத்து நிறுத்துவதில் தடுப்பூசியின் செயல்திறன் 80 சதவீத அளவில் இருக்க வேண்டும். தொற்று நோயை முழுமையாக தணிப்பதற்கு 100 சதவீத செயல்திறன் இருக்க வேண்டும்.

* தொற்றுநோயை தடுப்பதற்கு குறைந்தபட்சம் தடுப்பூசியின் செயல்திறன் 60 சதவீதமாக இருக்க வேண்டும். 100 சதவீதத்தினருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

* தொற்றுக்கு ஆளாகிற ஒரு நபர் 2.5 முதல் 3.5 பேர் வரையில் நோயை பரப்புகின்றனர்.

* 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டால், அதன் செயல்திறன் 70 சதவீதமாக இருக்க வேண்டும்.

* 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசியை போடுகிறபோது அதன் செயல்திறன் என்பது குறைந்தபட்சம் 60 சதவீதம் இருக்க வேண்டும். உச்சத்தை குறைப்பதற்கு 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டால் செயல்திறன், குறைந்தது 80 சதவீதமாக இருக்க வேண்டும்.

* தடுப்பூசியின் செயல்திறன் 60-80 சதவீத அளவில் இருக்கிறபோது, சில சூழ்நிலைகளில் மற்ற நடவடிக்கைகளின் தேவை மிக அதிகமாக இருக்கும். 

மேலும் செய்திகள்