பாகிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-30 00:02 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை கொட்டி தீர்த்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக மேற்கூறிய மாகாணங்களில் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஏற்கனவே கொரோனாவால் முடங்கிப் போய் கிடந்த பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை இப்போது வெள்ளமும் முடக்கிப் போட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் முழுவதும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 125 அதிகரித்துள்ளது. மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்