அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; பெண் தொழிலாளி பலி

அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2020-10-01 00:24 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் உலகின் முன்னணி இணையவழி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் இங்கு தான் ‘பேக்’ செய்யப்படுகின்றன. இதற்காக இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இங்கு வழக்கம்போல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போது கிடங்குக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் உருவானது. தொழிலாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உள்பட 2 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதற்கிடையில் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்