‘கொலை முயற்சியின் பின்னணியில் புதின் உள்ளார்’ - ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி பரபரப்பு குற்றச்சாட்டு

கொலை முயற்சியின் பின்னணியில் அதிபர் புதின் உள்ளதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-10-02 00:22 GMT
பெர்லின்,

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி (வயது 44). அதிபர் புதினை கடுமையாக விமர்சிப்பவர். அவரை விஷம் கொடுத்து கொல்ல நடந்த முயற்சியில் கோமா நிலைக்கு சென்றார். ஆனால் ஜெர்மனியின் தலையீட்டால் பெர்லின் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்து, 32 நாட்களுக்கு பிறகு ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். முன்னதாக அந்த நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்து நலம் விசாரித்தது நினைவுகூரத்தக்கது.

அலெக்சி நவல்னி, ஜெர்மனி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “இந்த குற்றப்பின்னணியில் (கொலை முயற்சி) புதின் உள்ளார். என்ன நடந்தது என்பது குறித்து நான் கூறுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. விஷம் தரப்பட்ட அந்த தருணம் பற்றி சொல்வதென்றால், அப்போது வலி எதையும் உணரவில்லை. ஆனால் நான் இறந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது” என கூறி உள்ளார்.

அதே நேரத்தில் தான் ரஷியாவுக்கு திரும்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது எனது பணி பயமின்றி இருப்பதுதான். எனக்கு எந்த பயமும் இல்லை” எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்