இலங்கையில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்வு- கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் பல்வேறு இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2020-10-10 12:43 GMT
கொழும்பு,

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மினுவெங்கடா பகுதியில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இலங்கை மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. 

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை அரசு தனிமைப்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலனவர்களில், கடந்த வாரம் தொற்று பாதித்தவருடன் தொடர்பு இருந்தவர்கள் என இலங்கை சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தொற்று பரவலால்  கம்பஹா பிராந்தியத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல, யக்கல ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் களனி பிராந்தியத்தின் ஜாஎல, கந்தான,  நீர்கொழும்பு பிராந்தியத்தின் திவுலப்பிட்டிய , மற்றும் சீதுவ  போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை கலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்,  கேளிக்கை விடுதிகள், பார்கள், உணவு விடுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.’

இலங்கையில் இதுவரை 4,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்த நிலையில், 3,278-பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்