கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்ட அவரது மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

Update: 2020-10-20 11:09 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார்.  இவரது மருமகள் மீனா ஹாரிஸ் (வயது 35).  வழக்கறிஞராக உள்ளார்.  குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  அந்த பதிவில், கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்டு படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அந்த படத்தில், கமலா ஹாரிஸ் கடவுள் துர்க்கையாக காட்சி அளிக்கிறார்.  மகிசாசுரன் ஆக அதிபர் டிரம்ப் காட்டப்பட்டு இருக்கிறார்.  அவரை ஹாரிஸ் குத்தி கொல்வது போன்று உள்ளது.

இதேபோன்று ஜனநாயக கட்சிக்கான அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், துர்க்கையின் வாகனம் ஆன சிங்கம் போன்று காட்டப்பட்டு இருக்கிறார்.

இந்த பதிவு வெளியிடப்பட்டு சற்று நேரத்தில் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.  இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்து அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் சுஹாக் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் கடவுளான அன்னை துர்க்கையின் முகவடிவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பது, உலகம் முழுவதும் உள்ள பல இந்து மக்களை ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இந்து அமெரிக்க அரசியல் செயற்குழு, அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்களுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

கடந்த வார இறுதியில், நவராத்திரியை முன்னிட்டு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அல்லவை அழிந்து நல்லவை வெற்றி பெறட்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன்.

நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் பதிவிட்டார்.

மேலும் செய்திகள்