மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

Update: 2020-10-20 21:55 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா டிரம்ப் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

நடப்பு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில், கணவரும் அமெரிக்க அதிபருமான டிரம்புடன் முதல் முறையாக  ஒரே மேடையில்  பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு  இருந்த நிலையில்,  தனது பிரசாரத்தை மெலனியா டிரம்ப் ரத்து செய்துள்ளார்.  

இது குறித்து மெலனியா டிரம்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த மெலனியா டிரம்ப்,   ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நன்றாக உணர்கிறார்.  ஆனால், தொடர் இருமல் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இன்று பயணத்தை ரத்து செய்துள்ளார்” என தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும்  முதல் பெண்மனி மெலனியா டிரம்ப் , டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளது நினைவுகூரத்தக்கது. 

மேலும் செய்திகள்