பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் 2வது அலை; பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய அறிவுறுத்தல்

பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் பொது இடங்களில் வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-10-28 20:53 GMT
இஸ்லாமாபாத்,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் மிகக்குறைந்த அளவில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது. இதற்கிடையில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது போன்ற கடுமையான ஊரடங்குகள் எதுவும் பாகிஸ்தானில் அமல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பின் 2வது அலை வீசத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தானில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 400 முதல் 500 வரை பதிவாகி வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக அதிக பாதிப்புகள் பதிவாகி வரும் நகர்ப்புற பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொது இடங்களான உணவகங்கள், வணிக வளாகங்கள், கடை வீதிகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டாலும், பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சமூக விலகல், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்