டெக்ரானில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டாரா? ஈரான் விளக்கம்

ஈரான் தலைநகர் டெக்ரானில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல்லா அகமது அப்துல்லா, தனது மகளுடன் இஸ்ரேல் படையினரால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-11-15 20:19 GMT
டெக்ரான், 

ஈரான் தலைநகர் டெக்ரானில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல்லா அகமது அப்துல்லா, தனது மகளுடன் இஸ்ரேல் படையினரால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அப்துல்லா அகமது அப்துல்லா, அபு முகமது அல் மஸ்ரி என்ற பெயராலும் அறியப்பட்டிருந்தார்.ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் லெபனானை சேர்ந்த வரலாற்று பேராசிரியரும், அவரது மகளும்தான் என கூறி, இந்த சம்பவத்தை ஈரான் மறைக்க முற்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.இந்த நிலையில், அப்துல்லா அகமது அப்துல்லா அவரது மகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுபற்றி ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அவ்வப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் பொய்யான தகவல்களை கசியவிட்டு ஈரானை பயங்கரவாத குழுக்களுடன் சேர்க்க முயற்சிக்கின்றன. ஈரானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த யாரும் வசிக்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.இந்த அப்துல்லா அகமது அப்துல்லா, 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஈரானின் மறுப்பால் அப்துல்லா அகமது அப்துல்லா, மகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டாரா, இல்லையா என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்