கொரோனா மரண பயம் : சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்ட வட கொரிய தலைவர்

கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-12-01 13:57 GMT
டோக்கியோ

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், அவரது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அரசின் உயர் மட்ட அளவிலான நிர்வாகிகள் குழுவும் சீனா அளித்துள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

 கிம் ஜாங் உன்  மற்றும் பல பல மூத்த வட கொரிய அதிகாரிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள தேசிய நல சிந்தனைக் குழுவின் மையத்தின் வட கொரியா நிபுணர் ஹாரி காசியானிஸ் தெரிவித்தார்.

இது குறித்த  ரகசிய தகவலை, ஜப்பான் நாட்டின் உளவு அமைப்பும் உறுதி செய்துள்ளது.கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிம் ஜாங் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜப்பான் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நாடு சீனா மட்டுமே.

சீனாவுடன் மட்டுமே வட கொரியா வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே, கொரோனா தடுப்பூசி தொடர்பில் ரகசிய ஆவணங்களை கைப்பற்ற வட கொரியா முன்னெடுத்த இணைய வழியான தாக்குதல்களை தென் கொரியா முறியடித்ததாகவும்,இங்கிலாந்து  நிறுவனம் ஒன்றில் முயன்று தோல்வியை சந்தித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் சீனா உடனான எல்லையை முதன் முதலில் மூடியவர் கிம் ஜாங் உன் மட்டுமே.மேலும், கடல் நீரினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக பயந்து, சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 110,000 டன் அளவிலான அரிசி, தற்போதும் துறைமுகத்தில் காத்துக் கிடப்பதாக கூறப்படுகிறது.

சினோவாக் பயோடெக் லிமிடெட், கன்சினோ பயோ மற்றும் சினோஃப்ராம் குழுமம் உட்பட குறைந்தது மூன்று சீன நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.

சீனாவில் கிட்டத்தட்ட 10 லட்சம்  மக்களால் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டதாக சினோஃப்ராம் கூறி உள்ளது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் தங்களது கொரோனா தடுப்பூசி சோதனை  மருந்துகளின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை பகிரங்கமாக வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்