மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் கைது

மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகி உர் ரகுமான் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-01-02 15:20 GMT
கோப்புப்படம்
இஸ்லாமாபாத், 

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஜாகி உர் ரகுமான் லக்வி. இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமை ராணுவ தளபதியாக இருந்து வருகிறார். 

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பண உதவி செய்தல், திட்டம் தீட்டுதல், குற்றவாளிகள் தங்க இடமளித்தல் போன்ற செயல்களில் லக்விக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதனால் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் லக்வியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சேர்த்துள்ளது. இந்த சூழலில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு காவல் நிலையத்தில் லக்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தீவிரவாதி ஜாகி உர் ரகுமான், பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். ஜாகி உர் ரகுமான் மீதான வழக்கு விசாரணை லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்