டிரம்ப் கணக்குகள் முடக்கம் - டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் அதிரடி

டிரம்ப் கணக்குகளை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதள நிறுவனங்கள் முடக்கி உள்ளன.

Update: 2021-01-07 13:50 GMT
Image courtesy : Reuters
வாஷிங்டன்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக  பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.  இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் சூழலில், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.  பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அறிவிக்கும் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் இன்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

 தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையில் 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை துணை ஜனாதிபதி  மைக் பென்ஸ் வழங்கினார். இதன் மூலம் வரும் 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதனிடையே தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ஜானாதிபதி டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு  ஆதரவாக டிரம்ப் டுவிட்களை வெளியிட்டார். இதை தொடர்ந்து , டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தற்காலிகமாக 12 மணி நேரங்களுக்கு முடக்கியது.ஒருமைப்பாட்டுக்கு எதிராக உள்ள 3 டுவிட்களையும் உடனடியாக நீக்கவில்லை என்றால் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என டிரம்பை எச்சரித்தது.

வன்முறை அதிகரிக்க காரணமாகும் எனக் கூறி பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் தகவல்களை நீக்கியது, அவருடைய கணக்கை 24 மணி நேரம் முடக்கியது. இன்ஸ்டாகிராம் நிறுவனமும் அவருடைய கணக்கை முடக்கியது.

ஜனநாயகத்திற்கு எதிரானது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், முறையாகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும் என்றும், சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை  தகர்த்தெறிய அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல் என்று டொனால்டு டிரம்பின் செயலை கடுமையாக விமர்சனம் செய்த ஜோ பைடன், அரசியலமைப்பை டிரம்ப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டொனால்டு டிரம்பின் விஷமத்தனமான அரசியலால் அமெரிக்க நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் தேசம் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி  பில் கிளிண்டன் டுவிட்டரில்  கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வாஷிங்டனில் நடைபெற்றுவரும் இழிவான நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும் என்றும் கூறினார். 

மேலும் செய்திகள்