சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் 14-ந் தேதி நாடு திரும்புகின்றனர்; மத்திய அரசு தகவல்

சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் 23 பேர் 14-ந் தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-01-09 22:58 GMT
புதுடெல்லி, 

இந்தியாவின் எம்.வி. ஜேக் ஆனந்த் சரக்கு கப்பல், சீனாவின் ஜிங்டாங் துறைமுகம் அருகே கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 23 இந்திய மாலுமிகள் உள்ளனர். இதே போன்று எம்.வி.அனஸ்தேசியா என்ற மற்றொரு சரக்கு கப்பல், சீனாவின் கபீடியன் துறைமுகம் அருகே கடந்த செப்டம்பர் 23-ந் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 16 இந்திய மாலுமிகள் உள்ளனர்.

இவ்விரு சரக்கு கப்பல்களும், அவற்றில் உள்ள சரக்குகளை இறக்குவதற்கு அனுமதிக்கப்படாததால் 39 இந்திய மாலுமிகளுடன் சீன கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இது தொடர்பாக தூதரக ரீதியில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், எம்.வி. ஜேக் ஆனந்த் சரக்கு கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் 23 பேர் வரும் 14-ந் தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி மத்திய கப்பல், துறைமுகங்கள் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், சீனாவில் சிக்கியுள்ள நமது மாலுமிகள் 23 பேர், ஜப்பான் சிபா நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் 14-ந் தேதி இந்தியா திரும்புகின்றனர். பிரதமர் மோடியின் வலுவான தலைமையால் மட்டுமே இது சாத்தியம் ஆகும் என குறிப்பிட்டார்.

மற்றொரு சரக்கு கப்பலான எம்.வி. அனஸ்தேசியா சரக்குகளை வெளியேற்றுவதற்காக காத்திருப்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்