அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்

அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்ததாக கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-11 02:30 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6 ந்தேதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். 

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை, நாஜி தாக்குதலை ஒத்திருந்ததாக கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “ஜனாதிபதி டிரம்ப் ஒரு தேர்தல் மற்றும் நியாயமான தேர்தலின் முடிவுகளை தடுக்க முயன்றார். பொய்களால் மக்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டத்தை அவர் நாடினார். நாஜிக்கள் 1938-ல் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை மேற்கொண்டனர், அதேபோல், கடந்த புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட டிரம்பின் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதியாக திகழ்பவர் டிரம்ப், அவர் முதுகெலும்பு அற்றவர்” என்று அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறினார். 

மேலும் செய்திகள்