கொரோனா பாதிப்பு தீவிரம்; ஹாங்காங்கில் முதன்முறையாக ஊரடங்கு அமல்

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஹாங்காங்கில் முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-01-23 17:33 GMT
ஹாங்காங்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுகள் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி பரவி வருகின்றன.  எனினும், இதில் சில நாடுகள் தப்பியும் உள்ளன.  ஒரு சில நாடுகள் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்புகளை கண்டறிந்ததும், ஊரடங்கு உள்ளிட்ட விசயங்களில் கவனம் செலுத்தின.

இதனால், கொரோனா பரவலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில், ஹாங்காங் நாட்டில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்நாட்டு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதன்முறையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்போர் தங்களது இடத்திலேயே இருக்க வேண்டும்.  அரசின் ஏற்பாட்டின்படி, கட்டாய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, கோவில், தெருக்கள் வீடுகள் மற்றும் பிரபல சுற்றுலா தலங்களிலும் இந்த உத்தரவு அமலாகும்.  ஹாங்காங் சுற்றுச்சூழல் துறை செயலாளர் வோங் காம் சின் கூறும்பொழுது, கட்டிடங்களில் இருந்து பைப் வழியே வரும் நீரை பரிசோதனை செய்கிறோம்.  கழிவு நீரில் கொரோனா பரவுவது பற்றியும் உறுதிப்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

ஹாங்காங்கில் 10 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.  இதுவரை 168 பேர் உயிரிழந்து உள்ளனர் என சீன செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்