அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் பதவி நீக்க விசாரணையிலிருந்து டிரம்ப் விடுவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார்.

Update: 2021-02-15 00:37 GMT
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை கடந்த மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றியது. டிரம்பை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் இனி அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாமல் செய்ய முடியும் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினர்.

அதன்படி நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் டிரம்ப் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு நேற்றுமுன்தினம் பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

செனட் சபையில் மொத்தமுள்ள 100 எம்.பி.க்களில் 50 பேர் ஜனநாயகக் கட்சியையும், 50 பேர் குடியரசுக் கட்சியையும் சேர்ந்தவா்கள். இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவா்கள் டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்தாலும், தீா்மானத்தை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் இந்த ஓட்டெடுப்பு நடந்தது.‌

அதன்படி டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக 57 உறுப்பினர்களும் எதிராக 43 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எனவே 3-ல் 2 பங்கு உறுப்பினா்களின் ஆதரவை பெற தவறியதால் தீர்மானம் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து பதவி நீக்க குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்