ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: புல்லட் ரெயில் பாதை சேதம்; போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

Update: 2021-02-15 12:03 GMT

டோக்கியோ, 

நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.1 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் மற்றும் அதனால் உருவான சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். மேலும் இந்த சுனாமி தாக்கியதில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் புகுஷிமா மாகாணத்தில் உள்ள புகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையம் விபத்துக்குள்ளானது.‌

அணுமின் நிலையத்தின் அணு உலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு வெளியானது. அதை இன்றளவும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த நிலையில் ஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள புகுஷிமா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் புகுஷிமாவின் கடலோர நகரமான நிமி நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 55 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டது. குறிப்பாக புகுஷிமா அருகே உள்ள மியாகி, இபராகி, டோச்சிகி, சைதாமா மற் றும் சிபா ஆகிய மாகாணங்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன.

உள்ளூர் நேரப்படி இரவு 11.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு மேல் நீடித்ததாக தெரிகிறது. இதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

புகுஷிமா மற்றும் மியாகியில் உள்ள சில நகரங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் புல்லட் ரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சாலைகள், புல்லட் ரெயில் பாதைகள் கடும் சேதமடைந்தன. பல பகுதிகளில், சாலைகள் மீது பாறைகள் விழுந்துள்ளன. டோக்கியோ நகரை வடக்கு பகுதிகளுடன் இணைக்கும், கடற்கரை சாலையில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு சீரமைப்பு பணிகளும், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்