துபாயில் வளைகுடா உணவு கண்காட்சி தொடங்கியது அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 85 நாடுகள் பங்கேற்பு

துபாய் உலக வர்த்தக மையத்தில் வளைகுடா உணவு கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 85 நாடுகள் பங்கேற்றன.

Update: 2021-02-22 10:56 GMT

துபாய்,

துபாய் உலக வர்த்தக மையத்தில் ஓவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வளைகுடா உணவு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 26-வது ஆண்டாக வளைகுடா உணவு கண்காட்சி துபாயில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறும். துபாய் துணை ஆட்சியாளரும், அமீரக நிதி மந்திரியும், துபாய் மாநகராட்சியின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவுடன் இக்கண்காட்சி நடக்கிறது.

இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 85 நாடுகள் பங்கேற்றுள்ளன. சுமார் 2 ஆயிரத்து 500 நிறுவனத்தின் அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதேபோல் அமீரகத்தின் சார்பில், கண்காட்சியில் துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. குறிப்பாக துபாய் மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடமாடும் சோதனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் தொடர்பான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் துபாய் நகரத்தில் உணவு பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கருத்தரங்கு

மேலும் உணவு பாதுகாப்புத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் அல்லது வினியோகம் செய்யப்பட்டு வரும் பொருட்கள் குறித்த மாதிரிகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இதனை பார்வையாளர்கள் ஒவ்வொரு அரங்கிலும் சென்று உணவு மாதிரிகளை பெற்று சுவைத்து வருகின்றனர்.

மேலும் பார்வையாளர்கள் ஒரு வழியாக சென்று மறு வழியாக திரும்பிச்செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

ஆய்வு

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைவரும் முக கவசத்தை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து வருகின்றனரா? என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

துபாய் நகரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்