உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அமீரகம்-கத்தார் இடையே பேச்சுவார்த்தை இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சீர் குலைந்தது. சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டில் கத்தார் நாட்டுடன் இணக்கமான உறவுகளை தொடர முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-02-23 10:23 GMT

அபுதாபி,

அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சீர் குலைந்தது. சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டில் கத்தார் நாட்டுடன் இணக்கமான உறவுகளை தொடர முடிவு செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அல் உலா ஒப்பந்தம் மூலம் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகளாக அனைத்து நாடுகளும் மீண்டும் கத்தார் நாட்டுடன் இணக்கமான உறவை தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில், அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று குவைத் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த குவைத் நாட்டின் அமீர் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவுக்கு இரு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் இணக்கமான நல்லுறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்