செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ரோவரின் பிரமிக்க வைக்கும் பணிகள் வரும் வாரங்களில் நடக்கும்; நாசா விஞ்ஞானி விஷ்ணு ஸ்ரீதர்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை 30-ல் இந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

Update: 2021-03-02 12:40 GMT
7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. அதன் பின்னர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பெர்சவரன்ஸ் ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவரின்‌ பிரமிக்க வைக்கும் மிக அற்புதமான பணிகள் வரும் வாரங்களில் நடக்கும் என நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தில் முன்னணி கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி விஷ்ணு ஸ்ரீதர் (வயது 27) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "நாங்கள் செவ்வாய் கிரகத்தில் அதிகமான படங்களை எடுக்க போகிறோம். நாங்கள் சூப்பர்கேம் கருவி மூலம் ஒளிக்கதிர்களை படமாக்கப்போகிறோம். நாங்கள் எங்கள் மைக்ரோ போனுடன் செவ்வாய் கிரகத்தின் ஒலிகளை ஆடியோ பதிவு செய்யப் போகிறோம். இப்படி பிரமிக்க வைக்கும் பல அற்புதமான பணிகளை பெர்சவரன்ஸ் ரோவர் வரும் வாரங்களில் செய்து முடிக்கும்" எனக் கூறினார். மேலும் அவர் "நாசா பயணங்கள் அடிப்படை கேள்வியை ஆராய்ந்து பதிலளிக்க தெளிவாக முயற்சி செய்கின்றன. பெர்சவரன்ஸ் ரோவரும் அதைத் தேட முயற்சிக்கிறது 

இறுதியில் செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததா பூமிக்கு வெளியே வாழ்க்கை இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முயல்கிறது" என தெரிவித்தார். நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் விஷ்ணு ஸ்ரீதர், செவ்வாய் கிரக ஆய்வு பணிகளுக்காக பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்