நைஜீரியாவில் பயங்கரம் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் சாவு

நைஜீரியா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Update: 2021-03-06 23:34 GMT

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடமேற்கு மாகாணமான சொகோட்டாவில் உள்ள டாரா என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

பெண்கள், குழந்தைகள் என பாகுபாடு இன்றி கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் அந்த பயங்கரவாத கும்பல் கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை திருடி சென்றது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் போகோஹரம் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என நைஜீரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் தாக்குதல் நடந்த கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்