ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உயர் அதிகாரியை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்; ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கிறது.

Update: 2021-03-14 17:30 GMT

இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஐ.நா. உதவி குழு அங்கு முகாமிட்டுள்ளது.இந்தநிலையில் ஐ.நா. உதவி குழுவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தலைநகர் காபூலில் காரில் சென்று கொண்டிருந்தார்.அவரின் பாதுகாப்புக்காக அவரது காருக்கு முன்னரும் பின்னரும் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.‌

அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஐ.நா. உயரதிகாரி இருந்த காரின் மீது அந்தக் காரை மோத முயற்சித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கார் பின்னால் வந்த ராணுவ வீரரின் வாகனத்தின் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து காரில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது.

இந்த குண்டுவெடிப்பில் ஐ.நா. உயரதிகாரி காயங்கள் இன்றி உயிர் தப்பினார். அதேசமயம் ராணுவ வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.‌

 

மேலும் செய்திகள்