எகிப்து ரெயில் விபத்தில் 19 பேர் பலி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

எகிப்து ரெயில் விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார மந்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-03-27 16:32 GMT
கெய்ரோ,

எகிப்து வட ஆப்பிரிக்காவின் மிக பழமையான மற்றும் மிகப்பெரிய ரெயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.  இந்நிலையில், தெற்கு எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரெயில்கள் நேற்று மோதி விபத்திற்குள்ளாகின.

தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், 32 பேர் பலியானார்கள் மற்றும் 66 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்களில் குறைந்தது 50 பேர் அருகிலுள்ள 4 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,793 ரெயில் விபத்துக்கள் நடந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கு  முன்னதாக, மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதிக்கொண்டதில் 43 பேர் பலியானார்கள்.  கடந்த 2016ம் ஆண்டில், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர்.

கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதிவேக ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கடந்த 2002ல் எகிப்தின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்.

இந்நிலையில், சுகாதார மந்திரி ஹலா சையது இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரெயில்கள் மோதி கொண்டதில் 19 பேர் பலியாகி உள்ளனர்.  185 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

சிலர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தனர்.  அதனால், அவர்கள் மரணமடைந்து விட்டனர் என தவறுதலாக கணக்கிடப்பட்டு விட்டனர்.  சுகாதார அமைச்சக ஆய்வுக்கு பின் 185 பேர் காயம் மற்றும் 19 பேர் பலி என தெரிய வந்துள்ளது என்று ஊடக சந்திப்பில் சையது இன்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்