அமீரகத்தில் ரமலான் மாதத்தில் நடந்த முதல் ஜும்ஆ தொழுகை; மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் பங்கேற்பு

நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகம் முழுவதும் ரமலான் மாதத்தில் முதல் ஜும்ஆ தொழுகை நேற்று பள்ளிவாசல்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

Update: 2021-04-17 10:45 GMT
ஜும்ஆ தொழுகை
அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிவாசல்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்ததும் ஏப்ரல் மாதத்தில், ரமலான் மாத சிறப்பு தொழுகைகளை முன்னிட்டு 50 சதவீதத்தினர் பங்கேற்கும் வகையில் பள்ளிவாசல்கள் திறக்கபட்டது. எனினும், ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த ஆண்டில் நோன்பு கடைபிடிக்கப்பட்டாலும் ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் போனது.

சமூக இடைவெளியுடன் தொழுகை
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அமீரகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நிறைவேற்றப்பட்டது. இதில் பொதுமக்கள் பள்ளிவாசல்களின் உள்ளேயும், வெளியிலும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.முன்னதாக பாங்கு எனப்படும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு இமாம்கள் மிம்பரில் (மேடை) ஏறி குத்பா எனப்படும் உரையாற்றினர். அதனை அடுத்து ஜும்ஆ தொழுகையானது சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் மகிழ்ச்சி
தொழுகைக்கு செல்பவர்கள் முக கவசம் அணிந்து கொண்டு தங்களுக்கான தொழுகை விரிப்புகளை கொண்டு வந்தனர். அதேபோல் திருக்குர்ஆனையும் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்தனர். பலர் செல்போன்களில் திருக்குர்ஆன் செயலிகள் மூலம் ஓதினர்.எனவே இந்த ஆண்டில் 5 வேளை தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ மற்றும் இரவு நேர தராவீஹ் தொழுகைகள் அனைத்தையும் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்