இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அரச மரியாதைகளுடன் நல்லடக்கம்

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல் இன்று அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2021-04-17 17:04 GMT
லண்டன்,

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (வயது 99), வயது முதிர்வு காரணமாக கடந்த 9ஆம் தேதி காலமானார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

முன்னதாக, வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில், சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத் ஊர்வலத்தில் வராமல், நேரடியாக தேவாலயத்திற்கு காரில் வந்து சேர்ந்தார். இதேபோல் ஊர்வலத்தில் பங்கேற்காத அரச குடும்ப உறுப்பினர்களும் காரில் வந்தனர். 

தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்குகள் எல்லாம் நிறைவடைந்ததும், இளவரசர் பிலிப்புக்கு அரசியிடம் இருந்த அசைக்கமுடியாத விசுவாசம், அவர் நாட்டுக்கு செய்த சேவை, அவரது தைரியம் போன்றவற்றை நினைவுகூர்ந்து வின்ட்சரின் மதகுரு அஞ்சலி செலுத்தினார். நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது. 

அதன்பின்னர் இளவரசர் பிலிப் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலத்தில் ஆயுதப்படையினர் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் 30 பேர் மட்டும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்