பெருவில் கோர விபத்து; ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது

தென் அமெரிக்க நாடான பெருவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பிரதேச நகரம் கஸ்கோ.

Update: 2021-04-18 13:18 GMT

தென் அமெரிக்க நாடான பெருவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பிரதேச நகரம் கஸ்கோ. இங்கு சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து போதைப் பொருள் கடத்தலை ஒழிக்க அங்கு ஆயுதப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக உளவு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஆயுதப்படை வீரர்கள் 12 பேர் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு சென்றனர். இந்த ஹெலிகாப்டர் அங்கு உள்ள வில்கனோட்டா ஆற்றுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.‌ இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.‌

எனினும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆயுதப் படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆற்றிலிருந்து அவர்களது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். அதேபோல் 5 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 2 வீரர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

 

மேலும் செய்திகள்