ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

Update: 2021-05-02 13:52 GMT
டோக்கியோ,

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி 10:27 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயமடைந்ததாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியாகி பிராந்தியத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜப்பான் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு ரிக்டர் அளவுகோளில் 9.0 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததும், இதில் மியாகி பிராந்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்