சீனாவின் கொரோனா தடுப்பூசி - அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி

சீனாவின் சைனோஃபாா்ம் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-05-07 23:16 GMT
பெய்ஜிங்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அந்த வகையில் சீனாவின் சைனோஃபாா்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அந்தத் தடுப்பூசியின் ஆய்வு தொடா்பான காரணங்களால் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தடுப்பூசியை பயன்படுத்த பல நாடுகள் தயக்கம் காட்டி வந்தன. 

இந்த நிலையில் சீனாவின் சைனோஃபார்ம் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6வது தடுப்பூசி இதுவாகும்.

சீனாவின் சைனோஃபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்