கொரோனா பாதிப்பு: இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்பட 4 நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு பயணிகள் வர தடை

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்பட 4 நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-11 02:56 GMT
அபுதாபி, 

தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து அமீரகத்துக்கு பயணிகள் விமானம் வர காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது அந்த நாடுகளில் இருந்தும் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமீரகம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விமானங்கள் அங்கிருந்து பயணிகளை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அமீரகத்தை சேர்ந்தவர்கள், தூதரக அதிகாரிகள், அரசு குழுவினர், அமீரகத்தின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள் ஆகியோர் மீண்டும் அமீரகத்துக்கு வர எந்தவிதமான தடையுமில்லை.

அதே நேரத்தில் அவர்கள் விமான பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 48 மணி நேரத்திற்குள் கொரோனா பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் அமீரகம் வந்திறங்கியதும் கொரோனா பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த தடையானது நாளை (புதன்கிழமை) இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்