பாலஸ்தீனிய பிரச்சினைக்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும்; வங்காளதேசம்

பாலஸ்தீனிய பிரச்சினைக்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும் என வங்காளதேசம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2021-05-17 18:03 GMT
Photo Credit: AFP
டாக்கா,

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கடந்த 10-ந்தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

அப்போது தொடங்கி தற்போது வரை இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. காசா நகரில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசா நகர் மீது வான் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களில் 58 பேர் சிறுவர்கள் ஆவர்.
அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் தங்கள் தரப்பில் இதுவரை 5 வயது குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இருதரப்பும் மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இதனிடையே, பாலஸ்தீனிய பிரச்சினைக்கு  விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும் என வங்காளதேசம் தெரிவித்துள்ளது. வங்காளதேச வெளியுறவு மந்திரி ஏ.கே.அப்துல் மோமன் இதுபற்றி கூறுகையில், “ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் அரபு அமைதி முயற்சி ஆகியவற்றின் படி பாலஸ்தீனிய பிரச்சினைக்கு ஒரு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்