மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் கடல்வழியாக நுழைந்த ஆயிரக்கணக்கான அகதிகள்

ஆப்ரிக்க நாடான மொரோக்கோவும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன.

Update: 2021-05-21 23:53 GMT
மாட்ரிட்,

ஆப்ரிக்க நாடான மொரோக்கோவும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன. கடல்வழி மற்றும் நில வழியாக இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துள்ளன. 

இதற்கிடையில், மொரோக்கோ நாட்டின் அங்கமாக உள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு மொரோக்கோவில் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் தலைவராக பஹ்ரிம் ஹலி என்பவர் செயல்பட்டு வருகிறார். மேற்கு சஹாரா பகுதி தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்ற நிலைப்பாட்டில் மொரோக்கோ உறுதியாக உள்ளது. 

இந்த நிலையில் பொலிசரியோ முன்னணி அமைப்பின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொரோக்கோவில் போதிய வசதி இல்லாததால் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கும் படி அந்நாட்டு அரசிடம் பஹ்ரிம் ஹலி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
அந்த கோரிக்கையை ஏற்ற ஸ்பெயின் அரசு பஹ்ரிம் ஹலி தங்கள் நாட்டில் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்ன்னர் சம்மதம் தெரிவித்தது. இதற்கு மொரோக்கோ அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், கடந்த சில நாட்களாக ஸ்பெயின் - மொரோக்கோ இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பின்னர் கடந்த 17-ம் தேதி முதல் ஸ்பெயின் உடனான எல்லைகளை சரிவர கவனிக்காமல் மொரோக்கோ அலட்சியம் காட்டி வருகிறது. இதன் காரணமாக மொரோக்கோ மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த நபர்கள் கடல் வழியாக நீச்சல் அடித்து, நிலம் வழியாக நடந்தும் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

மொரோக்கோவுடன் எல்லையை பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில் கடல் மற்றும் தரை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைகின்றனர். கடலில் நீந்தியும், தரைவழியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை தாண்டியும் அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

அவ்வாறு அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் விதமாக சியோட்டி நகரின் எல்லையில் ஸ்பெயின் தனது ராணுவத்தை களமிறக்கியுள்ளது. கடல் மற்றும் நிலம் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் அகதிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு மீண்டும் மொரோக்கோ நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தற்போதுவரை ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள் 6 ஆயிரம் பேர் மொரோக்கோ நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொரோக்கோவில் இருந்து அகதிகள் அதிக அளவில் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் சம்பவம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்