சீனாவில் காரை கொண்டு மனைவி மீது மோதல்; 7 பேருக்கு கத்திக்குத்து: கணவன் வெறிச்செயல்

சீனாவில் பழிவாங்கும் நோக்கில் காரை கொண்டு மனைவி மீது மோதிய கணவரை தடுக்க சென்ற 7 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2021-05-31 07:08 GMT
பெய்ஜிங்,

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கார் ஒன்று வந்து மோதியது.  இதில், பெண் ஒருவர், அவரது தோழி மற்றும் ஒரு நபர் பலத்த காயமடைந்தனர்.

காரில் வந்த நபர் பெண் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.  அவரை தடுத்த பெண்ணின் தோழி மற்றும் அங்கிருந்தவர்களை, அந்நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதன்பின் சம்பவ பகுதியில் இருந்து அந்நபர் தப்பி விட்டார்.  தற்கொலைக்கு முயன்ற அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில், பழிவாங்கும் நோக்கில் காரை கொண்டு தனது மனைவி மீது அவர் மோதியது தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த 7 பேரும் மற்றும் தாக்குதல் நடத்திய நபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த 2வது பழிவாங்கும் தாக்குதல் இதுவாகும்.  கடந்த வாரம், சீனாவின் வடகிழக்கே டாலியன் நகரில் நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் நபர் ஒருவர் காரை மோத செய்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவரை கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  அதற்கு சமூகத்தில் உள்ளவர்களை பழிவாங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என தெரிய வந்தது.

மேலும் செய்திகள்