கொரோனா உகான் ஆய்வகத்தில் இருந்தே வந்தது; சீனா உலக நாடுகளுக்கு ரூ.730 லட்சம் கோடி அபராதம் செலுத்த வேண்டும்: டிரம்ப்

சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது.

Update: 2021-06-04 13:35 GMT

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிய சமயத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த வைரஸ் சீனாவில் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும், சீனா இதனை வேண்டுமென்றே உலகுக்கு பரப்பியதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மேலும் அவர் கொரோனா வைரசை சீனா வைரஸ் என்றே அழைத்து வந்தார். இதனிடையே அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசிக்கும் உகான் ஆய்வகத்துக்கும் இடையிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து வந்ததா என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில் ‘‘இப்போது எல்லோரும், என்னை எதிரி என்று அழைப்பவர்களும் கூட உகான் ஆய்வகத்தில் இருந்து வந்த சீனா வைரஸ் குறித்து டிரம்ப் சொல்வது சரிதான் என்று கூற தொடங்கியுள்ளனர்‌. டாக்டர் அந்தோனி பாசிக்கும் உகான் ஆய்வகத்துக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்பு எதையும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு சத்தமாக பேசுகிறது. இந்த ஆய்வக கசிவு காரணமாக ஏற்படுத்திய மரணம் மற்றும் பேரழிவுக்கு சீனா, அமெரிக்காவுக்கும் உலகுக்கும் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.730 லட்சம் கோடி) அபராதமாக வழங்க வேண்டும்’’ என கூறினார். 

மேலும் செய்திகள்