ரஷியாவில் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 3 பேர் உடல் கருகி சாவு

ரஷியாவில் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-06-10 03:15 GMT
மாஸ்கோ, 

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரியாசான் நகரில் மிகப் பெரிய ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர். எனினும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்