எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும்: துபாய் ஆட்சியாளர்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக நிதிநிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-15 23:25 GMT

நிதிநிலை அறிக்கை

எமிரேட்ஸ் குழுமத்தின் இந்த ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 210 கோடி திர்ஹாம் நஷ்டம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்த நிலையிலும் 170 கோடி திர்ஹாம் லாபம் ஈட்டப்பட்டது. எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றில் இது முதலாவது நஷ்டம் ஆகும். இது குறித்து துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வழக்கமான நிலைக்கு முன்னேறும்

கொரோனா பாதிப்பு காரணமாக விமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதில் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் விதிவிலக்கல்ல. எனினும் இந்த விமான நிறுவனம் தடைகளை கடந்து வலுவான நிறுவனமாகும். எமிரேட்ஸ் விமான நிறுவனம் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இந்த கடினமான நிலைமைகளை கடந்து எமிரேட்ஸ் விமான நிறுவனமும், துபாய் தேசிய டிராவல் ஏஜென்சியான டனாடா நிறுவனமும் மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பொருளாதார வாய்ப்பு

இதன் மூலம் விமான போக்குவரத்து துறையில் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கும், உலகுக்கும் சிறப்பான சேவைகளை வழங்கும். வருங்கால சந்ததியினருக்கு வளமான நகரத்தை உருவாக்குவதே துபாய் நகரின் நோக்கம் ஆகும். மேலும் தங்களது திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் பொருளாதார வாய்ப்புகளை பெற முடியும். இதன் காரணமாக தகுதியானதொரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும். இத்தகைய செயல்பாடுகள் மூலம் ஒவ்வொருவரும் தங்களது கனவுகளை நனவாக்க முடியும்.

பெரிய மாறுதல்கள்

துபாய் நகரத்தை உலகின் மற்ற நாடுகளுடன் இணைப்பதன் மூலம், உலகை துபாய் நகருடன் மிகவும் நெருக்கமாக ஆக்கிட எமிரேட்ஸ் விமான நிறுவனம் முக்கிய பங்களிப்பினை வழங்கும். மேலும் நமது எண்ணங்களை செயல்படுத்தவும் இந்த நிறுவனம் உதவியாக இருக்கும்.கொரோனா பாதிப்பு நிறைவடைந்த பின்னர் நமது வாழ்க்கை முறையில் பெரிய மாறுதல்கள் ஏற்படும். இந்த சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக கருதி சிறப்பான எதிர்காலத்துக்கான அடித்தளத்தை கட்டமைக்க வேண்டும். அமீரகத்தில் வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒருங்கிணையும் போது இன்னும் பல சாதனைகளை நாம் செய்ய முடியும்

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்