பிரான்சில் இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை, ஊரடங்கும் கைவிடப்படுகிறது

பிரான்சில் முகக்கவசம் அணிவதில் இருந்து சில விதி விலக்குகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-16 18:00 GMT
பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில்  கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,200- பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரான்சில்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு ஏற்பட்ட குறைந்த பட்ச எண்ணிக்கை இதுவாகும். 

கொரோனா தொற்று பாதிப்பை 5 ஆயிரமாக குறைக்க வேண்டும் என்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டமிட்டு இருந்தார். ஆனால், இந்த இலக்கை காட்டிலும் தொற்று பாதிப்பு நாட்டில் சரிந்துள்ளது. இதனால், ஏற்கனவே தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்ட தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ஊரடங்கை கைவிடுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. 

 பிரான்ஸ் பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது: "வியாழன் முதல்  வெளியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், பொது போக்குவரத்து,  உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், மற்றும் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்.  ஊரடங்கு உத்தரவு ஜூன் 20  முதல்  ரத்து செய்யப்படும்.  கோடைகாலம் முடிவதற்குள் சுமார் 3.5 கோடி மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்