சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு உயர்வு

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை தானாக பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம், இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்தானது.

Update: 2021-06-17 23:22 GMT
இதன்படி, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து முதல்முறையாக இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. ஆண்டுதோறும் அந்நாடு தகவல் அளிக்க வேண்டி உள்ளது. அத்துடன், நிதிமுறைகேடுகளில் ஈடுபட்ட இந்தியர்களை பற்றிய விவரங்களையும் அளித்து வருகிறது. இந்தநிலையில், சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தனது வருடாந்திர கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த முதலீடு ரூ.20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில், இந்த முதலீடு ரூ.6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வந்த முதலீடு, தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அளவாகும். இந்தியர்கள், பங்கு பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில் உள்ள சுவிஸ் வங்கிக்கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக இந்தியர்கள் மேற்கொண்ட முதலீடும் இவற்றில் அடங்கும். அதே சமயத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் போட்டு  வைத்துள்ள பணம், தொடர்ந்து 2-வது ஆண்டாக குறைந்துள்ளது. இவை சுவிஸ் தேசிய வங்கிக்கு அந்நாட்டு வங்கிகள் அளித்த புள்ளிவிவரங்கள் ஆகும். இவற்றில், கருப்பு பணம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சுவிஸ் வங்கி வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து நாட்டினர்தான் அதிக பணம் போட்டு வைத்துள்ளனர். அமெரிக்கா 2-வது இடத்திலும், இந்தியா 51-வது இடத்திலும் உள்ளன.

மேலும் செய்திகள்