இந்தியாவில் இருந்து துபாய்க்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் இறக்குமதி

துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-06-17 23:36 GMT
துபாய் நகருக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் ஆகியவை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கன் பகுதியில் இருந்து பிரபலமான வாழைப்பழங்கள் இறக்குதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழைப்பழத்துக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாழைப்பழங்கள் துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கிடைக்கும். உலகில் வாழைப்பழம் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வகையான வாழைப்பழங்கள் அமீரகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழைப்பழ இறக்குமதியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்