இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்

ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மத வழிபாட்டு தளம் அருகே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2021-06-18 17:47 GMT
Image courtesy : Reuters
ஜெருசலேம்,

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார். புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் வழியாக இஸ்ரேலியர்கள் நேற்று முன்தினம் கொடிநாள் பேரணி அணிவகுப்பு நடத்தினர். இந்த பேரணியில் தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் ஆயிரக்கணக்கான பங்கேற்றனர். 

இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இஸ்ரேலிய போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வால் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. 

இந்த பேரணி இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நப்தலி பென்னெட் தீவிர வலதுசாரி கொள்கைகளை கொண்டவர் என்பதால் ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகவும் ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று முன் தினம் அதிகாலை காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசாவில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குல் தீப்பற்றக்கூடிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதற்கு பதிலடியாகவும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு தரப்பிற்கும் இடையே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள பழைய நகர் பகுதியில் அமைந்துள்ள அல்-அக்சா வழிபாட்டு தளத்திற்கு வெளியே இன்று பாலஸ்தீனர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது, அல்-அக்சா வழிபாட்டு தளத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீனர்கள் கற்கள் போன்றவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகைகுண்டுகளையும் பயன்படுத்தினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு அல்-அக்சா வழிபாட்டு தளத்திற்கு வெளியே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 3 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் இதே அல்-அக்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இந்த மோதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவங்கள் முழு அளவிலான போருக்கு வழிவகுத்தது. 11 நாட்கள் நடந்த அப்போரில் இரு தரப்பையும் சேர்த்து மொத்தம் 256 பேர் உயிரிழந்தனர். இந்த 11 நாட்கள் போருக்கு பின்னர் கடந்த மாதம் 23-ம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து இருதரப்பும் பெரிய அளவில் எந்த வித தாக்குதலும் இதுவரை நடத்தவில்லை. ஆனால், அல்-அக்சா வழிபாட்டு தளத்திற்கு வெளியே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இன்று நடைபெற்ற மோதல் மிகப்பெரிய அளவில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த வழிவகுக்கலாம். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்