அமெரிக்காவில் போட்டியின்போது சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியால் மோதி தாக்குதல்

அமெரிக்காவில் போட்டியின்போது சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியால் மோதி தாக்குதல் டிரைவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Update: 2021-06-21 00:17 GMT
நியூயார்க், 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சோலோ நகரில் நேற்றுமுன்தினம் சைக்கிள் பந்தய போட்டி நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான சைக்கிள் பந்தய வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அவர்கள் அனைவரும் வேகமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டு புறப்பட்டனர். அப்போது சைக்கிள் பந்தயம் நடந்த சாலையில் திடீரென லாரி ஒன்று புகுந்தது. லாரியின் டிரைவர் லாரியை அதிவேகத்தில் ஓட்டிச்சென்று சைக்கிள் பந்தய வீரர்கள் மீது மோதினார். இதில் அவர்களில் பலர் சாலைகளில் தூக்கி வீசப்பட்டனர். இன்னும் சிலர் லாரி சக்கரங்களில் சிக்கினர். இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த நபர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். லாரி மோதியதில் சைக்கிள் பந்தய வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியால் மோதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடினர்.

இதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு இரும்பு கடையில் லாரி டிரைவர் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்த போது, லாரி டிரைவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கான் காரணம் குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்