விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம்; சாதனங்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தன

ஹாலிவுட்டில் விண்வெளியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Update: 2021-07-02 22:15 GMT
இந்தநிலையில் விண்வெளியில் முதல் முழுநீள திரைப்படத்தை எடுக்க அமெரிக்காவும், ரஷியாவும் போட்டி போட்டு வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூசை வைத்து, விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக நாசா கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் இந்த படம் குறித்து வேறு எந்தவித தகவலும் வெளியாக வில்லை.‌அதேவேளையில் ரஷியா விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் முழு மூச்சில் இறங்கியுள்ளது.

வைசவ் என பெயரிடப்பட்டுள்ள முதல் விண்வெளி திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும் கதையின் நாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் கடந்த மே மாதம் அறிவித்தது. ரஷிய மொழியில் வைசவ் என்றால் சவால் என்று அர்த்தம். இந்தநிலையில் விண்வெளியில் 
படப்பிடிப்புக்கு தேவையான சாதனங்களை ‘பிராகிரஸ் எம்.எஸ். 17' விண்கலம் மூலம் ரஷியா கடந்த புதன்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

இதற்கிடையில், வைசவ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் நடிகை யுலியா பெரெசில்ட் ஆகிய இருவரும் வருகிற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ‘சோயூஸ் எம்.எஸ்.19' விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ராஸ்கோமாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்