சோமாலியாவில் ஓட்டலுக்குள் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Update: 2021-07-03 17:53 GMT
அவர்கள் அந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களையும், நாசவேலைகளையும் அரங்கேற்றி வருகிறார்கள்.குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மொகாதிசுவில் உள்ள ஒரு ஓட்டலில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென அந்த ஓட்டலுக்குள் நுழைந்து வெடிகுண்டுகளை  வெடிக்கச் செய்தார்.வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என அந்த நாட்டின் பிரதமர் முகமது உசேன் ரோபல் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்